ஐந்து வயது குழந்தை...
தஸ்தயேவஸ்கியின் 'கரமசோவ் சகோதரர்களி'ல் மிகவும் முக்கியமான கதாபாத்திரம் திமித்ரி. கரமசோவின் மூத்த மகன். மிகவும் வெளிப்படையான மனிதன். குடிகாரன், யாரிடமும் காரணமே இல்லாமல் சண்டையிடுபவன்.பணத்துக்காகவும்,பெண்ணுக்காகவும் பல்வேறு இன்னல்களுக்கும்,அவமதிப்புக்கும் ,துயரங்களுக்கும் ஆளானவன் .
தன் தந்தையை கொலை செய்துவிட்டான் என்று குற்றம் சுமத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறான். திமித்ரியின் வழக்கு பற்றி விசாரணை அதிகாரிகள் இறுதி முடிவெடுக்க கலந்தாலோசிக்கும் போது விசாரணை நடந்த அறையின் ஒரு மூலையில் இருக்கும் பெட்டியின் மீது ஓய்வெடுக்க திமித்ரி படுக்கிறான். படுத்தவன் அப்படியே உறங்கிவிடுகிறான். உறக்கத்தில் ஒரு கனவு வருகிறது.
நாவலில் மிக மிக முக்கியமான பகுதி இது.
அந்தக் கனவை தஸ்தயேவஸ்கி எப்படி எழுதிச் செல்கிறார் என்பதைப் பார்ப்போம்.
" அவனுக்கு வினோதமான கனவொன்று வந்தது. அது அந்த இடம், காலம், சூழலுக்கு சற்றும் தொடர்பற்றதாக இருந்தது. கனவில், அவன் ஒரு ஸ்தெப்பி புல்வெளியில் வண்டியில்போய்க்கொண்டிருக்கிறான்.படையில் இருந்தபோது பயணம் செய்த வெளி அது. வண்டியை ஒரு குடியானவன் ஓட்டுகிறான்.நிலம் சேறும் சகதியுமாக இருக்கிறது. குளிர் நடுங்குகிறது. நவம்பர் மாதத்தின் ஆரம்ப நாள்கள் அவை.
பனி விழுந்து கொண்டிருக்கிறது .பெரிய பனித்துகள்கள் தரையைத் தொடுமுன் கரைந்துபோய் விடுகின்றன. சாட்டையைக் காற்றில் சுழற்றி அடித்தபடி வண்டியோட்டி வேகமாகத்தான் ஓட்டுகிறான். அவனுக்கு வயது சுமார் ஐம்பதிருக்கும். அவர்களது பாதையில் ஒரு சிற்றூர் குறுக்கிட்டது. ஊரை நெருங்க,நெருங்க அதன் பாதி வீடுகள் எரிந்து சாம்பலாகிவிட்டிருந்தது கண்களில் பட்டது.
எரிந்து முடிந்த வீடுகளின் கரிந்த மரத்தூன்கள் வானை நோக்கி கைநீட்டி நின்றன. ஊரைக் கடக்கும்போது வேகமாக செல்ல வேண்டியிருந்தது. சாலையின் இருபக்கங்களிலும் பெண்கள் கூட்டம் கூட்டமாக நின்றிருந்தார்கள். அவர்கள் உடல் மெலிந்து காணப்பட்டார்கள். அவர்களின் முகங்கள் கரிந்திருந்தன.
சாலையின் கோடியில் நின்றிருந்த ஒரு பெண் அவனது கவனத்தை கவர்ந்தாள். எலும்புந்தோலுமாக உயரமாக இருந்த அவளுக்கு நாற்பது வயது இருக்கலாம். ஒருவேளை இருபது வயதுக்காரியாகவும் இருக்கலாம். அவளது கையில் ஒரு குழந்தை. அது அழுதுகொண்டிருந்தது. அந்தத் தாயின் வற்றி உலர்ந்த மார்பகங்களில் சொட்டுப் பால் இல்லை. பசியால் அழுத குழந்தை எலும்புக் கூடாகக் காட்சியளித்தது. கடும் குளிரால் அதன் உடல் நீலம் பாரித்துக் கொண்டிருந்தது . "ஏன் அவர்கள் அழுகிறார்கள் ? என்ன நடந்தது ? "என்று வண்டியோட்டியிடம் கேட்டான் திமித்ரி .
" அந்தக் கொழந்தே " என்று ஆரம்பித்தான் வண்டியோட்டி 'குழந்தை' என்று சொல்லாமல் 'கொழந்தே' என்று அவன் உச்சரித்தது திமித்ரிக்கு பிடித்திருந்தது. அது எளிய குடியானவர் மொழி. அந்த மொழியில் மனித நேயமும் இதமும் காணப்பட்டது .
" அது ஏன் அழுகிறது ? அது ஏன் அப்படி எலும்பும் தோலுமாக இருக்கிறது ? அதற்கு ஆடை கூட இல்லையா என்ன ஆயிற்று ?" என்று கேட்டான் அவன்.
" அதோட ஒடம்பு உறைஞ்சு போச்சு. சட்டையும் குளிர்ல நனைஞ்சு போச்சு வேற சட்ட இல்ல " என்றான் அவன்.
" ஏன் ? ஏன் ?" என்று துளைத்தான் திமித்ரி .
" அவங்க ஏழைங்க அய்யா...அவங்க ஊடெல்லாம் எரிஞ்சு போச்சு. சாப்பிட ரொட்டி இல்ல ,இனி அவங்க பிச்சை எடுக்கப் போயிடுவாங்க அய்யா "
" அய்யோ ! என்ன அநியாயம் ! அவர்கள் ஏன் இப்படி நின்று கொண்டிருக்கிறார்கள் ? அவர்கள் ஏன் இப்படி பரம ஏழைகளாக இருக்கிறார்கள் ? அந்தக் குழந்தைகள் ஏன் அப்படி வேதனைப் படவேண்டும் ? அவர்கள் வாழும் இந்தப்பூமி ஏன் இவ்வாறு கட்டாந்தரையாகக் கிடக்கிறது ? அவர்கள் ஏன் ஆடிப்பாடி மகிழ்ச்சியாக வாழாமல் குழந்தைக்கும் கூட பாலில்லாமல் சபிக்கப் பட்டவர்களாக வாழ்ந்து வாடிக் கொண்டிருக்கிறார்கள் ? "என்பதை எனக்கு விளக்கிச் சொல் என்று தவிப்போடு கேட்டான் திமித்ரி .
அப்படிக் கேள்விகள் கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லையென்று தெரிந்தாலும் அவனால் அப்படிக் கேட்காமல் இருக்க முடியவில்லை. அந்தக் காட்சிகள் அவன் இதயத்தைப் பிழிந்தன. சொல்ல முடியாத வேதனை அவனை ஆட்கொண்டது. அழுகை வரும் போலிருந்தது.
அந்த அழும் குழந்தைக்கு ஏதாவது உடனே செய்ய வேண்டுமென்று அவன் தவித்தான். தாமதமில்லாமல் இப்போதே உதவ வேண்டுமென்று அவன் மனம் துடித்தது. அவனது இதயத்தை நெருப்பு பற்றிக்கொண்டது. ஒளியின் பக்கம் அவன் திரும்பினான். அவன் இப்போது வாழ விரும்பினான். தனக்கு வழிகாட்டும் ஒளி விளக்கை நோக்கித் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்க ஆவல் கொண்டான் அவன் . உடனே புறப்பட வேண்டும் இப்போதே இப்போதே இப்படியே என்ன? எங்கே ?" என்று கண்கள் விழித்துக் கொண்டு கத்தினான் திமித்ரி.
கனவிலிருந்து விழித்தெழுந்த திமித்ரியிடம் விசாரணை அதிகாரி வாக்குமூலத்தை நீட்டுகிறார். குழந்தைகளை பற்றிய கனவு திமித்ரியை முற்றிலும் மாற்றியிருக்கிறது. எந்த மறுப்பும் தெரிவிக்காமல் வாக்கு மூலத்தில் கையெழுத்திடுகிறான்.
தந்தையை கொலை செய்யாவிட்டாலும்,தந்தையை கொலை செய்ய நினைத்ததற்காக தண்டனையை ஏற்றுக்கொண்டு சைபிரியாவுக்கு போகத்தயாராக இருப்பதாக கூறுகிறான்.
விசாரணையின் போது கண்ட கனவு தனக்குள் ஏற்படுத்திய மாற்றத்தை பற்றி தம்பி அல்யோசாவிடம் திமித்ரி பகிர்ந்து கொண்டதை தஸ்தயேவஸ்கி எப்படி எழுதிச் செல்கிறார் என்பதையும் பார்ப்போம்
" என் ஆத்மாவை அப்படியே முழுசாக உன் முன் எடுத்துவைக்க நான் காத்திருந்தேன். இந்த இரண்டு மாத காலத்தில் நான் புதுமனிதனாக மாறிவிட்டேன். எனக்குள் அப்படியொருவன் பிறந்திருக்கிறான். அவன் எனக்குள் இதுவரைக்கும் சிறைபட்டுக் கிடந்திருக்கிறான். விதியின் இந்தக் கடுமையான அடி என் மேல் விழுந்திருக்கவில்லை என்றால் அவன் வெளியே வருவதற்கான வாய்ப்பே அமையாமல் போயிருக்கும். நினைத்தால் அச்சமாகத் தான் இருக்கிறது. ஆழமான சுரங்கத்தில் கனிமங்களை சம்மட்டி கொண்டு இருபதாண்டுக் காலம் வெட்டி எடுக்கும் கடும் தண்டனை எப்படிப்பட்டதாக இருக்கும் ? ஆனால், என் அச்சம் அதைப் பற்றியதன்று. எனக்குள் குடிகொண்டிருக்கும் அந்தப் புதிய மனிதன் என்னை கைவிட்டு போய் விடுவானோ என்று தான் நான் அச்சப்படுகிறேன். அந்த சுரங்கங்களில் என்னைப் போல் தண்டிக்கப்பட்ட ஒருவனை, மனித நேய இதயம் படைத்த ஒருவனை நான் சந்திக்ககூடும். அவனுடன் இதயம் கலந்து நட்புக் கொள்ளக் கூடும். அதனால் அந்த தண்டனை துன்பங்களை நான் மறந்துவிடவும் முடியும்.
அந்தக் குற்றவாளியின் செத்து உறைந்துபோன இதயத்தை என்னால் உயிர்பிக்கவும் முடியலாம். அவனைப் போற்றி வளர்த்து நரகத் தீயிலிருந்து மகா மேன்மையுள்ள ஒரு மாமனிதனை வெளிக்கொண்டு வரவும் சாத்தியப்படலாம்.
அவன் சகல துயரங்களையும் அறிந்தவனாக் இருப்பான். இப்படிப்பட்ட மாமனிதர்கள் நிறையப்பேர் வெளிப்படாமல் மறைந்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நாமே பொறுப்பு இல்லையென்றால் நான் எதற்காக ,ஒரு கணப்பொழுதில் அந்தக் கொழந்தையைக் கனவு காண வேண்டும் ?
அந்தக் கொழந்தைக்காகவே நான் சைபிரீயாவுக்கு போகப்போகிறேன்.
நாம் அனைவரும் மற்ற அனைவரின் செயல்களுக்கும் பொறுப்பாளிகள் ஆகிறோம் .
அந்தக் கொழந்தையின் துன்பத்திற்கும் நாமே பொறுப்பு. ஏனென்றால் நாமனைவரும் குழந்தைகளே. சிறியவர்களாக இருந்தாலும், பெரியவர்களாக் இருந்தாலும் நாமனைவரும் குழந்தைகளே .
அவர்கள் அனைவருக்காகவும் நான் போய்த் துன்பங்களை ஏற்றுக் கொள்ளப் போகிறேன் .தம்பி ! நான் அப்பாவைக் கொல்லவில்லை ஆனால் அந்தப் பழியை ஏற்று, சென்று நான் துன்பங்களை அனுபவிக்க முடிவு செய்துவிட்டேன் " என்கிறான்.
தஸ்தயேவஸ்கி தன் ஆன்மாவை திமித்ரி வழியாக இந்த உலகிற்கு திறந்து காட்டுகிறார் .குழந்தைகளும் அப்பாவி மக்களும் படுகின்ற துயரை கனவில் கண்ட திமித்ரி புதிய மனிதனாக பரிணமிக்கிறான் .தந்தையை கொலை செய்ய நினைத்ததை எண்ணி குற்றஉணர்வு கொள்கிறான்.அப்பாவி மக்களும், குழந்தைகளும் ஏன் துயரப்படுகிறார்கள் என்று அர்த்தமற்ற எந்த கேள்வியும் அவன் கேட்பதில்லை . குறிப்பாக மற்றவர்களை குற்றம் சாட்டவில்லை . தன்னால் எதுவுமே செய்யமுடியவில்லை என்று மனம் வெதும்பி , கையறு நிலையில் மக்களின் ,குழந்தைகளின் துன்பத்திற்க்கு தானும் பொறுப்பானவன் என்று எண்ணி தன்னையே தண்டித்துக் கொள்கிறான் திமித்ரி .
ஒரு உண்மையான கலைஞன் அப்பாவி மக்களும், குழந்தைகளும் படுகின்ற துயரை பார்த்து தன்னால் எதுவுமே செய்யமுடியாத போது என்ன செய்வான் ? தன் கையறு நிலையை உணர்ந்து உன்னதமாக தற்கொலை செய்து கொள்வான் . இல்லை திமித்ரியைப் போல தன்னை தானே தண்டித்துக் கொள்வான் இல்லை மரணமடைந்துவிடுவான் .. இந்த நாவலை எழுதி முடித்த சில மாதங்களிலேயே தஸ்தயேவஸ்கியும் இறந்து விட்டார் .
[ கவிஞர் புவியரசு அவர்கள் மொழியாக்கம் செய்த கரமசோவ் சகோதரர்களில் இருந்து மேற்கோள் இடப்பட்ட பகுதிகள் எடுக்கப்பட்டது ]
கருத்துகள்
கருத்துரையிடுக