காந்தி

காந்தி வர்ணாசிரமத்தை தூக்கிப்பிடித்தார், தீண்டாமைக்கு எதிராக எதுவும் செய்யவில்லை போன்ற பிழையான கருத்துகள் பொதுபுத்தியில் பதிவாகியுள்ளது. காந்தியை இரு வழிகளில் அணுகலாம். ஒன்று, அவருடைய எழுத்து மூலம் அவரை புரிந்து கொள்வது. இரண்டாவது, அவருடைய வாழ்ந்த வாழ்க்கை வழியாக அவரை அணுகுவது. காந்தி, இரண்டாவதைத்தான் பரிந்துரைக்கிறார்..தான் இறந்தவுடன் தன் உடலோடு தான் எழுதிய எழுத்தையும் எரிக்கச்சொல்கிறார். தான் உலகத்திற்கு விட்டுச் செல்வது வாழ்ந்த வாழ்க்கைதான் என அழுத்தமாக சொல்லியுள்ளார். ஆக,காந்தியைப் பற்றிய பெரும்பாலான பிழையான கருத்துகள் அவர் எழுத்தை வாசித்து அதன் வழியாக தவறான பிம்பம் உருவாகியுள்ளது.

சனாதான பழக்கங்களை சிறுவயது முதல் எதிர்த்தார். சிலரை தொட்டால் தீட்டு என்பது அவரை உலுக்கியது..கடல்தாண்டி இங்கிலாந்துக்கு படிக்கப்போனால், தன் சொந்த சாதியால் பகிஷ்க்கரிக்கப்படுவோம் எனத் தெரிந்தும் பயணத்தை மேற்கொண்டார்..பிறகு, தென்னாப்பிரிக்காவில் ஃபினிக்ஸ் ஆசிரமத்தில், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் விருப்பப்பட்டால்,  மாட்டிறைச்சி வழங்கவேண்டும் என ஆணை பிறப்பித்தார். இரு வேறுபட்ட கலப்பு மத திருமணங்களை ஊக்குவித்தார்.. மனித கழிவுகளை அவரவர்களே சுத்தம் செய்யவேண்டும் என்றார். தாழ்த்தப்பட்ட ஒருவரின் அறையை சுத்தம் செய்ய அவர் மனைவி மறுத்த போது, காந்தி வெகுண்டு எழுந்து கடுமையாக கண்டித்தார்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வரும்போது நாயக்கர் என்ற தலித் சிறுவனையும் அழைத்துவந்தார். அதுமட்டுமல்லாமல், லஷ்மி என்ற தலித் சிறுமியை தத்து எடுத்துக்கொண்டார். பின்னாளில் லஷ்மியை ஒரு பிராமணருக்கு மணம் முடித்து வைத்தார். தன்னுடைய மகன் தேவதாஸ் காந்தி கலப்பு திருமணம் செய்ய வேண்டும் என தீர்மானமாக இருந்ததோடு அதை செய்தும் காட்டினார். சபர்மதி ஆசிரமத்தில், இந்துமதி என்ற தலித் பெண்ணுக்கும், டெண்டுல்கர் என்ற பிராமணருக்கும் திருமணம் நடத்தி வைத்தார். ஆசிரமத்தில் குலத்தொழிலை ஒழித்தார். எல்லோரும் அனைத்து தொழில்களையும் கற்க வெண்டும் என்றார். அதன்படி, அனைவரும், விவசாயம்,கைத்தொழில், சுத்தம் செய்தல், மலம் அள்ளுதல், தோட்ட வேலை, சவரம், சமைப்பது அனைத்து தொழில்களையும் ஒவ்வொருவரும் கற்றனர்.

மாதவிடாய் தொடர்பான தீட்டு, பெண்களை ஒதுக்குவது போன்ற கொடூரங்களை காந்தி ஒழித்துக்கட்டினார். பிராத்தனைக்கூட்டங்களில் உருவ வழிபாடுகளை தடை செய்தார். பைபிள், குரான், கீதை போன்ற  மத நூல்களின் படி, பிராத்தனை நடைபெற்றது.

இறுதியாக, வார்தாவில் அவருக்கு உணவு சமைத்து பரிமாறியது கோவிந்த் என்ற தலித்...

இம்மாதிரி எண்ணற்ற உண்மை சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் உண்டு...அதனால்தான் அவர் வலியுறுத்தினார்...” என் எழுத்தை பார்க்க வேண்டாம், என் வாழ்க்கையை பாருங்கள்” என்றார்...

இந்தக் குறிப்பு எழுத உதவியது EPW இதழில் வெளியான ஆங்கிலக்கட்டுரை...சுட்டியில் பார்க்கலாம்..இது கட்டுரை என சொல்லமுடியாது..எல்லோருக்கும் புரிகிற வகையில் flow diagram ஆக உள்ளது..இந்த முக்கிய சுட்டியை அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல், தமிழில் எழுத என்னை ஊக்குவித்த நண்பர் வெங்கடேஷ் சக்கரவர்த்திக்கு மனமார்ந்த நன்றி.

நகலெடுக்கப்பட்டது

கருத்துகள்