அயோத்திதாசர் 105

தமிழாசானின் பெண்ணியம்

உரையாசிரியர் அயோத்திதாசப்பண்டிதர் .

தையல் சொற்கேளேல்.

- இது ஒளவை எழுதிய ஆத்திச்சூடியில் வரும் பாடலடி.

தையல் என்பதற்கு பெண் என்று பொருள் கொண்டு "பெண் பேச்சை கேளாதே" என்றே இதற்கு பொருள் கொண்டு வருகிறோம். பல உரையாசிரியர்களாலும் விளக்கவாதிகளாலும் திரும்ப திரும்ப சொல்லப்பட்டு இதுவே ஒற்றை அர்த்தம் என்றாக்கப்பட்டு விட்டது.

தையல் என்ற சொல்லுக்கு பெண் என்ற ஒற்றை அர்த்தம் தான் உண்டு என்று கருதி வருவதாலேயே இந்தவகை விளக்கம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

ஒளவை என்னும் பெண் மூலமே பெண்ணுக்கு எதிரான இக்கருத்து சொல்ல வைக்கப்பட்டிருக்கிறது(இக்கருத்தைக் கூறும் ஒளவையே பெண் தான்) என்ற விமர்சனமும் இதனாலேயே உருவானது. இந்த ஒரு வரி ஒளவை என்னும் குடத்தில் இட்ட துளி நஞ்சாக நிலைத்து விட்டது.

ஆனால் ஒளவை பாடல்களுக்கு உரை எழுதிய அயோத்திதாசப்பண்டிதர் இந்த பாடலடி மீது முற்றிலும் வேறொரு வாசிப்பை நூறாண்டுகளுக்கு முன்பே நிகழ்த்தியிருக்கிறார். அவரையே  கைவிட்ட தமிழ் அறிவுலகம் அவரின் இது போன்ற விளக்கங்களை கண்டுகொள்ளாமல் போனதில் வியப்பில்லை .மொழி , வழக்காறு, வைத்திய அறிவு என்கிற பின்னணியில் அமைந்த அவரின்  வாசிப்பு சுவாரஸ்யமானது. அர்த்தம் யாருக்கு தான் விசுவாசமானது?

"கொடூரமான வார்த்தைகளுக்கு செவிகொடாதே" என்பது அயோத்திதாசப் பண்டிதர் இப்பாடலடிக்கு தரும் பொருளாகும்.

இதன் மூலம் தையல் என்பதற்கு பெண் என்று பொருள் கொள்ளாமல் தைத்தல் அதாவது குத்துதல் என்று பொருள் கொள்கிறார்.

குத்திக்குத்தி இழுக்கும் கொடூரச்செயலுக்கு தைத்தல் என்றும், பனியின் கொடூரத்தால் இலையுதிரும் மாதத்திற்கு தை மாதம் என்றும், கொடூர நெய் கலந்த வஸ்துகளுக்கு தைலம் என்றும் , புண்பட இதயத்தில் தைக்கக் கூறும் கொடூர வார்த்தைக்குத் தையல் மொழி என்றும் கூறப்படுமென்பதாக அவ்வார்த்தைக்கான அர்த்தங்களை கூறுகிறார்.

அதாவது "அன்னியனால் புண்படக்கூறும் தையல் மொழியாம் கொடூர வார்த்தையை செவியில் கேட்டவுடன் கோபமீறும். அக்கோபத்தால் ஒருவருக்கொருவர் கைகலக்கும் தையலுண்டாம்.அத்தையலால் துன்பம் பெருகி மாளாதுக்கத்திற்கு ஆளாக்கிவிடும். ஆதலின் எதிரிகள் கூறுங் கொடூர சொற்களை கேளாதிருப்பதே சுகமென்று அறிந்த ஞானத்தாய் (ஓளவை) தையல் சொற்கேளேல் என்று வற்புறுத்திக் கூறியுள்ளாள்" என்று விளக்கி முடிக்கிறார்.

(மே 5 அயோத்திதாசப்பண்டிதரின் 105 ஆவது நினைவாண்டு )

கருத்துகள்