புறநானூறு 239




நம்பி நெடுஞ்செழியன் இறந்தான். அவனது பண்புகளை ஒவ்வொன்றாக அடுக்கிச் சொல்லி புலவர் அவன் இல்லையே என வருந்துகிறார்.:

கைப்புயத் தோளில் வளையல் அணிந்த இளைய மகளிரைத் தழுவினான்.


பூங்காவில் பறித்த மலர்களை அணிந்துகொண்டான்.


குளுமையும் மணமும் மிக்க சந்தனத்தைப் பூசிக்கொண்டான்.


அவனோடு பகைமை கொண்டவர்களின் கால்வழியே இல்லாமல் செய்தான்.


அவனது நண்பர்கள் உயர்வு எய்தும்படிச் செய்தான்.


‘இவர் வலிமை மிக்கவர்’ என்று அவன்களுக்குக் கீழ்ப்படியமாட்டான்.


‘இவர்கள் மெலியவர்கள்’ என்று எண்ணித் தன்னை மேம்படுத்திக்கொள்ளமாட்டான்.


பிறரிடம் தனக்கு அது வேண்டும் என்று கையேந்தமாட்டான்.


தன்னிடம் இரப்பவர் எதைக் கேட்டாலும் மறுக்காமல் வழங்குவான்.


வேந்தர் அவையில் தன் புகழை நிலைநாட்டிக்கொண்டவன்.


எதிர்த்து வரும் படையை முன்னே நின்று தாங்கிக்கொள்வான்.


இவனை எதிர்த்து நிற்க மாட்டாமல் திரும்பிச் செல்லும் படைகள் பலவற்றைக் கண்டவன்.


விரைந்து செல்லும் குதிரைமீது செல்வான்.


தெருவில் தேரில் செல்வான்.


உயர்ந்த களிற்றின் மீதும் செல்வான்.


இனிக்கும் தேறலை உடைய மொந்தைகளைப் பலருக்கும் வழங்கினான்.


பாணர்களின் பசியைப் போக்கினான்.


மயக்கிப் பேசி ஏமாற்றும் பழக்கம் இல்லாதவன்.


இப்படிச்.

ஒருவன் செய்யவேண்டிய எல்லாவற்றையும் செய்தவன் இவன்.

ஆகையால்,

புகழை விரும்பிம் இவனது தலையை மண்ணில் கிடத்துங்கள். அல்லது தீயிலிட்டுச் சுடுங்கள். இவன் புகழ் மாயப்போவது இல்லை.

இடுக என்பதற்குப் “பட்டடி படுக” என்று என்று எழுதிக் காட்டுகிறது, புறநானூற்றுப் பழைய உரை.

பாடல் (சொற்பிரிப்புப் பதிவு)

தொடியுடைய தோள் மணந்தனன்;

கடி காவில் பூச் சூடினன்;

தண் கமழும் சாந்து நீவினன்;

செற்றோரை வழி தபுத்தனன்;

நட்டோரை உயர்பு கூறினன்;      5

'வலியர்' என, வழிமொழியலன்;

'மெலியர்' என, மீக்கூறலன்;

பிறரைத் தான் இரப்பு அறியலன்;

இரந்தோர்க்கு மறுப்பு அறியலன்;

வேந்துடை அவையத்து ஓங்கு புகழ்தோற்றினன்;               10

வருபடை எதிர் தாங்கினன்;

பெயர்படை புறங்கண்டனன்;

கடும் பரிய மாக் கடவினன்;

நெடுந் தெருவில் தேர் வழங்கினன்;

ஓங்கு இயல களிறு ஊர்ந்தனன்;             15

தீம் செறி தசும்பு தொலைச்சினன்;

பாண் உவப்ப பசி தீர்த்தனன்;

மயக்குடைய மொழி விடுத்தனன்;ஆங்குச்

செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்

இடுக ஒன்றோ! சுடுக ஒன்றோ!               20

படு வழிப் படுக, இப் புகழ் வெய்யோன்தலையே!

திணை பொதுவியல்; துறைகையறுநிலை.

நம்பி நெடுஞ்செழியனைப்

பேரெயின் முறுவலார் பாடியது.

காலம் : கி.மு. மூன்றாம் நூற்றாண்டுமுதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு

கருத்துகள்