சரி செய்யப்பட வேண்டியாது யார்? ஏன்? எதை?

Yes all men

அப்போது எட்டவாது படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் தெரு முனையில் நான்கு இளைஞர்கள். தினமும் போகிற வருகிற பெண்களை கிண்டல் செய்து கொண்டிருப்பார்கள். ஒரு நாள் அந்த அக்கா ஏதோ எதிர்த்துக் கேட்கப் போக ஒருவன் தன் வேட்டியைத் தூக்கி தன் குறியைக் காட்டினான். அந்த அக்கா அழுது அலறி பதறி வீட்டுக்கு ஓடிவிட்டது. 

அந்த ஆணுக்கு அந்த இழிவான செய்கையை செய்வதற்கான துணிச்சல் எங்கே இருந்து வந்தது.?

"பொட்டச்சிருக்கி இவளால என்ன செய்ய முடியும்"

"காலனிக்காரி, கீச்சாதி, இவளுக்கு வக்காலத்து வாங்க எவன் வருவான்"

அதையும் மீறி காவல்துறைக்கு சென்றால் அங்கே என்ன பிடுங்கிவிடுவார்கள். போன வருடம் ஒரு குழந்தையை தலையை அறுத்து கொலை செய்தார்கள் என்ன செய்ய முடிந்தது. இதற்கும் பின்னால் என்ன உளவியல் இருக்கிறது..?
காவல் நிலையத்திலேயே நடந்த பாலியல் வன்புணர்வுகளை 
நாம் அறிந்ததில்லையா..?

"உள்ள போடி பொட்டச்சி உனக்கு ஒன்னும் தெரியாது" என்ற வசையை நான் பல வீடுகளில் கேட்டிருக்கிறேன். பெண்கள் ஒடுக்குமுறை சார்ந்த அனைத்து பிரச்னைகளிலும் மறைமுகமாக இருப்பது ஒன்றே தான். அது "உள்ளே போ". 

பாலியல் வன்முறைகளின் போது இங்கே சொல்லப்படும் ஒரு கருத்து உண்டு. அவள் ஏன் வெளியே வருகிறாள்.? அவள் ஏன் அந்த நேரத்துக்கு வெளியே வருகிறாள்.? இதைத்தான் சுழட்டி சுழட்டி சொல்லிக் கொண்டிருப்பார்கள். மொத்தத்தில் அவள் வெளியே வந்தது தான் பிரச்னையாக இருக்கும்.

பாலியல் வல்லாங்கு செய்யப்பட்ட பெண்ணுக்கு உடல் ரீதியான துன்பதைவிட மனரீதியான துன்பம் அதிகம். அது அவ்வளவு சீக்கிரம் மனதில் விட்டு அகலாது. வருடக்கணக்கானாலும் கூட. 
ஒருவன் ஆண் குறியைத் தூக்கிக் காண்பித்து தன்னை இழிவு செய்து விட்டான். அது இழிவு ஏற்படுத்தும் அகச்சிக்கல் சொல்லிப் புரியவைக்க முடியாது. 
அந்தச் சிக்கலில் உள்ள பெண் அவள் அறியாத மற்ற ஆண்களைக் கண்டால் உத்தம புருஷன் என்று நினைக்க வேண்டுமா.? அவள் உண்மையில் பாதுகாப்பற்றுத் தான் இருக்கிறாள். அப்படித்தான் உணர்கிறாள். இது மிக மிக எளிய உண்மை. 

காந்தி சொன்னார், "நள்ளிரவில் தனியே ஒரு பெண் சுதந்திரமாக நடமாட முடிகிறதோ அப்போது தான் இந்த நாட்டுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்".

எத்தனை கூரிய "wisdom".
நான் சிறுவயதில் ஒரு வாக்கியத்தை முக்கி முக்கி மனப்பாடம் செய்தேன். "Please allow us to speak"
..
..
..
..
..

இந்த விவாதத்தில் இன்னும் சிலவற்றை சொல்லலாம் என்று நினைக்கிறேன். சில தோழர்கள் கேட்கிறார்கள் "நீயும் தான் ஆம்பள அப்ப நீ ரேப்பிஸ்டா".? சிறப்பான கேள்வி என்று நினைத்துக் கொண்டு இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். 

"பாலினம் என்பது உடலைத் தாண்டியது, ஆணாக உணர்பவர்கள் ஆண், பெண்ணாக உணர்பவர்கள் பெண்" என்ற கருத்து வந்து நிறைய காலம் ஆகிவிட்டது. 
மூளையை இடுப்பில் வைத்துக்கொண்டு பேசுகிறவர்களும் கூடி விட்டார்கள். வார்த்தையைப் பிடித்து தொங்குபவர்களிடம் நான் பேசவில்லை. அவர்கள் எதைபிடித்து வேண்டுமானாலும் தொங்குவார்கள் என்னிடம் இருப்பதோ ஒன்று என்பதால் நேரடியாக விளக்கத்திற்கு வருகிறேன்.

சுதந்திரம் குறித்து காந்தி சொன்னவற்றிற்கு வருகிறேன். 

"நள்ளிரவில் தனியே ஒரு பெண் சுதந்திரமாக நடமாட முடிகிறதோ அப்போது தான் இந்த நாட்டுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்".

இதைக் கொஞ்சம் விளக்கிச் சொல்வோம். இந்தியாவிற்கு சுதந்திரம் எழுபது வருடங்களுக்கு முன்பே கிடைத்துவிட்டது. 
அதற்கு என்ன? ஒரு பெண் நடு இரவில் சுதந்திரமாக நடமாட முடியாத நிலைமையில் தான் இருக்கிறது. அது எப்படி சுதந்திர நாடாகும். இந்தியா சில பிற்போக்குத் தனங்களை ஆணாதிக்க தடித்தனங்களை கைக்கொண்டுள்ளது. அதை கைவிட வேண்டும். அதுவரையில் இந்தியா அடிமை நாடு தான் என்று சொல்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

உடனே நீயும் தான் இந்தியன் அப்போது நீ அடிமையா.? என்றொரு மழுமட்டைத்தனமான கேள்வி ஒன்றைக் கேட்பார். 

இங்கே பிரச்சனை இருக்கிறது. அது சரிசெய்யப்பட வேண்டும் என்பது தான் சாராம்சமான கருத்து. சரி செய்யப்பட வேண்டுமா இல்லையா என்பது தான் விவாதம்.?


யாத்ரா நீலா என்ற மனே ாஸ் குமார்

கருத்துகள்